திருக்கடிகை எனும் சோளிங்கபுரம் தற்போது (சோளிங்கர்) தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில், 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு வைணவ திருக்கோயில்களில் 22-ல் ஒன்றாகவும், மிகச் சிறந்த பிராத்தனை திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்தலத்து எம்பெருமானை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடியுள்ளனர். இத்தலத்தை ஆழ்வார்கள் புராணப் பெயரால் கடிகாசலம் என்றனர்.
தவப்பெரியோர்கள் ஏழு மாமுனிவர்களான வாம தேவர், வசிஷ்டர், கத்யபர் அத்திரி, ஜமதக்னி, கெளதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனை தொழ எம்பெருமான் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி அவர்கள் நினைத்தமாத்திரத்தில் ஒரு கடிகை ( ஒரு நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் சோளசிம்மபுரம் சோளிங்கபுரம் என அழைத்து தற்போது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க அவதாரம் என்றால் அதனை மறுத்தல் கூடுமோ? கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையை கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரமல்லவோ அது பெற்ற தகப்பனே பகையாய் மற்றை யார் எவரும் எவ்வகையிலும் உதவிட முடியாத நிலையில் பள்ளியில் ஓதிவந்த சிறுவன் பிரகலாதனின் சொல்லை ஸத்யமாக்க தன்னை அண்டியவர்களை நரசிங்கமாய் அவதரித்து உதவியவனின் மேன்மையும் நீர்மையுமே அடிவர்க்குப் பெரும்பலமாகும்.
அத்தகைய தெள்ளிய சிங்கமாகிய தேவனே யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில் கொண்டுள்ளான் திருக்கடிகை மலையில்.
அரக்கோணம் வழியாக சோளிங்கபுரம் நகரின் உள்ளே நுழையும்முன் நிழல் தரும் மரங்கள் அடர்ந்த திருக்குளமும் தோரணவாயிலும் எம்பெருமான் மலைக்கு கைக்காட்டுகின்றன. அழகிய அக்குளம் பிரம்ம தீர்த்தம் என்றும் தக்கான்குளம் என்றும் அழைக்கப்படும். நான்முகன் சாபதோஷம் நீங்கிய குளமாதலால் பிரம்ம புஷ்கரனி எனவும் வழங்கப்படுகிறது.
ஊர்திருக்கோயிலில் உற்சவமூர்த்தி அருள்மிகு பக்தோசித பெருமாள் (தக்கான் என்று திரு நாமம்) சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று கொடியேறி சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரம் அன்று தீர்த்தவாரியும் கொடி இறக்குதலும் நடைபெறும். சித்திரை மாதம் பிரம்மோற்சவம் முடித்து பெரியமலைக்கு கொடி இறக்கம் காணவும், துவாதசாராதனம் கண்டருளவும் எழுந்தருளும் போது இக்குளத்தில் தீர்த்தவாரி கண்டளுவதால் தக்கான் குளமாயிற்று, இக்குளக் கரையில் அழகியதொரு கோயிலும் ஆஞ்சநேயரின் 30 அடி உயர சிலையும் உள்ளது.
இக்கோயிலில் காஞ்சிபுரம்இ தேவராஜப் பெருமான் தன் மெய்யடியாரான சுவாமி தொட்டாச்சார்யாருக்கு கருடவாகனத்தில் காட்சி அளித்தற்கு பிரத்யட்சமாக கச்சியப்பதி இறைவன் கருடவாகனத்தில் காட்சி அளிக்கும் அற்புத சிலா விக்கரத்தை இன்றும் காணலாம்.
தக்கான்குளத்தில் நீராடித் தூய ஆடை தரித்து தூய சிந்தனையுடன் பெரியமலை அடிவாரம் சென்ற அளவில் ஒரு குளம் காணப்படும். இதுதான் நரசிம்ம தீர்த்தமாகும். சிவன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க நீராடிப் பேறு பெற்ற தீர்த்தமும் இதுவே ஆகும். இக்குளக்கரையில் தானம், தருமம் செய்வது கடையைக் காட்டிலும் மேலான பலனைத் தருவதாகும்.
நரசிம்ம தீர்த்ததில் நீராடியோ, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டோ மேலும் சில அடிகள் நடந்தால் சிங்கபெருமானின் மலைக்கோயில் படிகட்டு வரும். அங்குத் தன்னிட்டு இறைவன் அருள் கொண்டு மலையேறும் போது காணும் அற்புதக் காட்சிகளை எவ்வாறு எடுத்துரைப்பது? 750 அடி உயரமும், 1305 படிகட்டுகளும் கொண்ட பெரியமலை உயரே சென்று மலையுச்சியை அடைந்து கொடிக்கம்பத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் முதலில் அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் மூலவர், உற்சவரை வணங்கி வழிபட வேண்டும்.
0 Comments